ஆதார் சட்டத்திருத்த மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா குரல் மூலம் வாக்கெடுப்பின் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த பின் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வங்கிக்கணக்கை தொடங்க, செல்போன் இணைப்புகளை பெற ஆதாரை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த இந்த மசோதா வழிவகை செய்வதாகக் கூறினார். மேலும் ஆதார் தொடர்பான தனி நபர் தகவல்களை பாதுகாப்பதற்கு கடுமையான விதிகளை அமல்படுத்தவும், இந்த மசோதா வழிசெய்யும் எனவும் அமைச்சர் கூறினார்.
அந்த வகையில் விதிகளை மீறி ஆதார் தொடர்பான தனிநபர் தகவல்களை சேமிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், சிறைதண்டனை வழங்கவும் இந்த மசோதா வழி செய்கிறது. இந்த மசோதாவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மட்டுமே மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா சாதி, மதம் என எந்த பாகுபாடும் காட்டாது. ஆதாரில் உள்ள தனிநபரின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும். தகவல் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.