உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.