பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், பொது சிவில் சட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த குடிமக்கள் வெவ்வேறு சொத்து மற்றும் திருமணச் சட்டங்களைப் பின்பற்றுகிறார்கள், இது தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மத்திய அரசு தனது மனுவில், "இது மிகவும் சிக்கலான மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயம். இந்திய சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த அறிக்கைக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. சட்ட ஆணையத்தின் அறிக்கை கிடைத்ததும், அதுதொடர்பாக இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும்" எனக் கூறியுள்ளது.
மேலும், "ஒரு குறிப்பிட்ட சட்டத்தை இயற்றுமாறு நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட சட்டத்தை இயற்றுவது அல்லது இயற்றாமல் இருப்பது என்பது சட்டமன்றம் சம்பந்தப்பட்டது" எனவும் மத்திய அரசு தனது மனுவில் கூறியுள்ளது.