இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துவருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். இந்த மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என சில நிபுணர்களும், குழந்தைகளை அதிகம் பாதிக்காது என சில நிபுணர்களும் தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், ஒன்றிய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் சுகாதாரச் சேவைகள் இயக்குநரகம், குழந்தைகளுக்கு ஏற்படும் கரோனா தொற்றைக் கையாளுவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் 18 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் தருவது பரிந்துரைக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் 'எச்.ஆர்.சி.டி இமேஜிங்' பரிசோதனையைத் தேவைப்படும்போது மட்டுமே செய்ய பரிந்துரைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரச் சேவைகள் இயக்குநரகம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அவசியமில்லை என கூறியுள்ளது. 6 - 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களின் மேற்பார்வையில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.