புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று (07.05.2021) பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதையடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சட்டமன்றத் தலைவராக நமச்சிவாயத்தை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரசுக்கு மூன்று அமைச்சர்கள், பாஜகவுக்கு துணை முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் பதவி ஏற்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளோம். ஓரிரு நாட்களில் அமைச்சரவை பொறுப்பேற்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரி மாநிலத்தை அனைத்து நிலையிலும் வளர்ச்சி அடைய பாடுபடும். தொழில், கல்வி, சுற்றுலா, ஆன்மிகம் போன்றவற்றில் முன்னேறுவதற்கும், மாநில மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்.
மாநில அந்தஸ்து உட்பட மாநிலத்திற்குத் தேவையானவற்றை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆலோசித்து செயல்படும். தென்மாநிலங்களில் முதலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தது. தொடர்ந்து இரண்டாவதாக புதுவையிலும் ஆட்சி அமைத்திருப்பது பாஜகவுக்கு பெரும் மகிழ்ச்சி ஆகும். தமிழகத்திலும் தாமரை காலூன்றியுள்ளது. விரைவில் தெலங்கானாவிலும் பாஜக வளரும்” என்றார். இதனிடையே ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை எதிர்த்து, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.