நாடு முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ளது.
இதில் இந்த ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 75,000 பேர் டெங்கு காய்ச்சலாலும், 30,000 பேர் பன்றி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பன்றி காய்ச்சல் காரணமாக அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 239 பேரும், ராஜஸ்தானில் 208 பேரும், மத்திய பிரதேசத்தில் 165 பேரும், குஜராத்தில் 151 பேரும் இறந்துள்ளனர். தமிழகத்தில் 542 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
அதேபோல டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை தமிழகத்தில் சுமார் 4,500 நபர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடுத்து கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.