கிழக்கு டெல்லியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின்போது நடந்த சிறு தவறால் ஒரு பெண், ஒரு இலட்சம் ரூபாயை இழந்துள்ளார். ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்தபோது ஏற்பட்ட கோளாறால் அவரின் பணப்பரிவர்த்தனை முழுமை பெறாமல் பாதியில் நின்றிருக்கிறது. அந்தப் பிரச்சனைக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ள, கூகுளில் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண்ணை தேடி, ஃபோன் செய்து அவரின் கார்டு நம்பர் உட்பட அவரின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை கொடுத்து புகாரைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திற்குள் அவரின் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை திருடியிருக்கிறார்கள்.
அவர் கூகுளில் தேடி எடுத்த வாடிக்கையாளர் சேவை மைய எண், உண்மையாக அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண் இல்லையென பின்புதான் தெரியவந்துள்ளது. கூகுளில் இருக்கும் அனைத்து தரவுகளும் உண்மையானது என நினைப்பது நமது தவறு. காரணம், கூகுளில் இருக்கும் எந்த தரவுகளையும் எந்த ஒரு தனி மனிதனும் ’எடிட்’ எனும் வசதியைக்கொண்டு எந்தத் தகவல்களையும் மாற்றி அமைக்கமுடியும். அதனால் இனியாவது கூகுளில் ஒரு விஷயத்தைப் பார்த்துவிட்டு அதுதான் உண்மை என ஏமாறாமல் தெளிவான தரவுகள் எங்கு கிடைக்கும் என்பதை சிந்தித்து செயல்படுவோம்.