டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்டத்திற்கு உட்பட்ட சி.ஆர்.பி.எப். பள்ளி அமைந்துள்ள பகுதியில் இன்று (20.10.2024) காலை 07.45 மணியளவில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மிக அருகில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் பள்ளியின் சுற்றுச்சுவரும் சேதம் அடைந்தது. இது தொடர்பாகத் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள், வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் வார நாட்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். நல்வாய்ப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் அங்குப் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் மர்மப் பொருள் வெடித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியின் சுவர்ப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், மர்மப் பொருள் வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் ஒருவர் கடந்து செல்கிறார். அவ்வழியாக ஆட்டோ ஒன்று கடந்து செல்கிறது. ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார். அந்த இடத்தில் ஒருவர் நின்று விட்டு செல்கிறார். மர்மப் பொருள் வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு கார் நிறுத்தப்பட்டு அதிலிருந்து ஒருவர் இறங்கிச் சென்றுள்ளார். இது போன்ற பல காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும் அந்த வீடியோவில் மர்மப் பொருள் வெடித்த போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக சிசிடிவி கேமராக்கள் அதிர்ந்ததும் தெரிய வந்துள்ளது.