டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு வரும் ஜூன் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவருக்கு எதிராக ஹவாலா பண மோசடி தொடர்பான புகார்கள் அமலாக்கத்துறைக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட டெல்லி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் புகாரில் உண்மைத் தன்மை இருப்பதாகக் கூறி சத்யேந்திர ஜெயினை நேற்று நள்ளிரவு அதிரடியாகக் கைது செய்தனர்.
மாநில அமைச்சரைக் கைது செய்ய பல்வேறு முன் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்ற அடிப்படையில் இந்த கைதை அமலாக்கத்துறை எளிதாக மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட அவரை, அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதிக்கும்படி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் வரும் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் இப்படி அதிரடியாக கைது செய்யப்பட்ட நிகழ்வு டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.