இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று (27.04.2021) இரவு முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியிலும் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் டெல்லி உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா சிகிச்சை மையத்தை ஏற்படுத்துமாறு டெல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம், ஐந்து நட்சத்திர ஹோட்டலான அசோகாவில் 100 அறைகளைக் கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்து, அதுதொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
ப்ரிமஸ் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை, ஹோட்டலில் அமைக்கப்படவுள்ள கரோனா சிகிச்சை மையத்தை நிர்வகித்து, சிகிச்சை அளிக்கும் எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. நீதிபதிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான படுக்கைகள் அனைத்தும் ஆக்சிஜன் வசதியுடன் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.