அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9ஆம் தேதி இரவு 50 இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 200 ராணுவ வீரர்கள் தங்களது எல்லைப் பகுதியை விட்டு இந்திய எல்லைப் பகுதியை நோக்கி மரக்கட்டைகள் மற்றும் ஆணிகள் பொருத்திய ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.
இதனைக் கவனித்த இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை தடுக்க முயலும் போது இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததை கவனித்த சீன ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இரு தரப்புக்கும் இடையே 30 நிமிடம் சண்டை நீடித்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு, ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்திற்கு மோடி பதில் கூற வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய போது, "எல்லையில் தொடர்ந்து சீன ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவத்தை தாக்கி வருகிறது. ஆனால் மத்திய அரசோ எல்லாம் சரியாக சென்று கொண்டு இருப்பதாக சொல்கிறது. நமது வீரர்கள் உயிரை பணயமாக வைத்து சீனா ராணுவத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போது, சீனாவில் இருந்து அதிக அளவிலான பொருட்களை இந்திய இறக்குமதி செய்து வருகிறது. நிலைமை இப்படி இருக்கும் போது இந்தியா, சீன பொருட்களுக்கான இறக்குமதியை அனுமதிக்கலாமா?. இந்திய வீரர்கள் மீது மோடி அரசுக்கு துளியும் மரியாதை இல்லையா?. கொஞ்சமாவது தைரியத்தை காட்டுங்கள். சீனா இறக்குமதி பொருட்களை நிறுத்துங்கள். அதன் மூலம் சீனாவுக்கு புத்தி வரும்" என்று மத்திய அரசுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக பேசி உள்ளார்.