கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா தாவணகெரே மாவட்டம் சென்னகிரி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர்,
பா.ஜனதா கட்சியில் நிறைய பேர் தந்தை-மகன், சகோதரர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அதை மோடி மறக்கக்கூடாது. நாங்கள் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. வளர்ச்சி பணிகளே எங்களுக்கு கைகொடுக்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் முழு பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்கும். இது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
பிரதமர் மோடி பேச்சு மட்டுமே பேசுகிறார். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. தேர்தலை மனதில் வைத்து தேவேகவுடாவை மோடி புகழ்ந்து பேசுகிறார். நான் கன்னடர் என்று சொல்லிக்கொண்டு மோடி கர்நாடகத்திற்கு வருகிறார். கன்னடர்களுக்கு மோடி என்ன செய்தார்?. உண்மையிலேயே கன்னடர்கள் மீது மரியாதை இருந்தால் கர்நாடக கொடிக்கு அவர் அனுமதி வழங்க வேண்டும். மகதாயி, காவிரி பிரச்சனையில் மோடி எப்போதும் மவுனம் வகித்து வருகிறார். அதில் இப்போதாவது, கர்நாடகத்திற்கு ஆதரவாக மோடி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.