மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உருவாகியுள்ள கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் புதிய மருந்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மிகத்தீவிரமாகப் பரவிவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்றவும், கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளவும் அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு வகையான கரோனா தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, சிகிச்சையில் உள்ளவர்களுக்காக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதால், இதற்கான தட்டுப்பாடும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த தட்டுப்பாட்டினை போக்கும் விதமாக புதிய மருந்துகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சித்து வந்தது. அதன்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) கரோனா சிகிச்சைக்கான புதிய மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. அதன் பலனாக, தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான பவுடர் வடிவிலான மருந்து ஒன்றை அண்மையில் கண்டறிந்து வெற்றிகரமாகச் சோதித்து முடித்திருந்தது DRDO. இந்நிலையில், இந்த புதிய மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை DRDO அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. முதற்கட்ட சோதனையில், 110 கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில், மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது மூன்றாவது கட்ட பரிசோதனை நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது. இந்த மருந்து மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மருந்தின் அவசர தேவைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுக் கழகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.