ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பேருந்து தடுமாறி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரியாசி பகுதியின் போலீஸ் டிசி விஷேஷ் மகாஜன் தெரிவிக்கையில், “ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரியாசியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்” என்று உறுதிப்படுத்தியுள்ளார். தீவிரவாத தாக்குதலால் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து ரியாசி பகுதி மூத்த காவல் கண்காணிப்பாளர் மோஹிதா சர்மா கூறுகையில், “ஷிவ் கோரியில் இருந்து கத்ரா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு காரணமாகப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 33 பேர் காயமடைந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.