காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து சிவசேனாவை மீட்க போராடி வருவதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 40- க்கும் அதிகமானோர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி அரசுக்கு எதிராக அணி திரண்டனர். மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சமாதான பேச்சுக்கு பலன் கிட்டாத நிலையில், சிவசேனா, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் அணிக்கு சிவசேனா பாலாசாகேப் என பெயர் சூட்டியுள்ளனர். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே யாரும் பாலாசாகேப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றார்.
இந்த நிலையில், தங்கள் போராட்டம் ஏன் என ஏக்நாத் ஷிண்டே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் பிடியில் இருந்து சிவசேனா மீட்கப்பட வேண்டும் என்றும், அதற்காகவே போராடி வருவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. உடனான கூட்டணியை சிவசேனா மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றனர்.
இதற்கிடையே, அதிருப்தி சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களில் 16 பேருக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நாளைக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூலை 10- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.