தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்பொழுது புயலாக மாறியுள்ளது.
வங்கக்கடலில் இந்த ஆண்டில் உருவான முதல் புயலுக்கு 'மோக்கா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் ஏமன் நாட்டால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டாம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியது. அதனைத் தொடர்ந்து இன்று புயலாக வலுப்பெற்றது.
வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு தீவிரப் புயலாக மாறி நாளை முற்பகல் மிகத் தீவிரப் புயலாகவும் இது வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 14 ஆம் தேதி முற்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் - மியான்மர் இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதத்தை புயல் ஈர்த்தபடி வடக்கு நோக்கிச் செல்வதால் வரும் நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.