காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தியாவின் பல நூறு சதுர கிலோமீட்டர்கள் சீனாவின் கட்டுப்பாட்டிற்குச் சென்றன என்ற பா.ஜ.க. தலைவர் நட்டாவின் கருத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா, சீனா இடையே நடைபெற்ற மோதல் குறித்து மன்மோகன் சிங் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், "நமது வீரர்களின் தியாகத்திற்கு உரிய நீதியை வழங்கிடப் பிரதமர் மற்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதில் சரியான நீதி வழங்கப்படவில்லை எனில், அது வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். ஏப்ரல் 2020க்குப் பின்னர் இன்றுவரை பல ஊடுருவல்களை மேற்கொண்டு கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஏரி போன்ற இந்தியப் பகுதிகளுக்குச் சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக உரிமை கோருகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா, "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அறிக்கை வெறும் வாய் வார்த்தைதான். காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியப் பிரதேசத்தின் 43,000 கி.மீ. தொலைவுக்கு மேல் சீனாவுக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஒரு சண்டை கூட இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி சீனாவிடம் சரணடைந்தது. அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தைச் சீனாவிடம் ஒப்படைத்தார். 2010 முதல் 2013 வரை சீனா மேற்கொண்ட 600 ஊடுருவல்களும் அவர் பிரதமராக இருந்தபோதே நடைபெற்றன" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நட்டாவின் கருத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், "2010-13 ஆம் ஆண்டில் எல்லையில் 600 முறை சீனப் படைகள் ஊடுருவியுள்ளது குறித்து மன்மோகன் சிங்கிடம், ஜே.பி. நட்டா கேள்வி எழுப்புகிறார். ஆம், காங்கிரஸ் ஆட்சியில் சீன ஊடுருவல்கள் இருந்தன. ஆனால் எந்தவொரு இந்தியப் பகுதியும் ஆக்கிரமிக்கப்படவில்லை. இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், 2015 ஆம் ஆண்டு முதல் 2,264 முறை சீன ஊடுருவல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் நீங்கள் கேள்வி எழுப்புவீர்களா?" எனக் கூறியுள்ளார்.