மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு ஒத்துழைப்பு தருமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அனுப்பிய கடிதத்திற்கு உரிய பதில் அளிக்கப்படும் என தமிழ்நாடு நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே நீண்ட காலமாக மேகதாது அணை பிரச்சினை என்பது தொடர்ந்து வருகிறது. காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணையால் தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி நீர் குறைக்கப்படலாம் என்றும், இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறது.
இச்சூழலில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'மேகதாது அணை கட்டுவதால் இரு மாநிலங்களுக்கும் பெரும் பயன் ஏற்படும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படாது. இவ்வாறு இருக்கையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. திட்டத்துக்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆய்வுகளை நடத்த கோரி கர்நாடக அரசு ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை எதிர்க்காதிருக்க தேவைப்பட்டால் அனைத்து அச்சங்களையும் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பா அனுப்பியுள்ள இந்த கடிதத்திற்கு உரிய பதில் தரப்படும் என தமிழ்நாடு நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களை சந்தித்த அவர், ''எடியூரப்பாவின் இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு முதல்வர் கண்டிப்பாக பதில் கடிதம் அளிப்பார். அந்த கடிதத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக தெரிவிப்போம்'' என்றார்.