வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமான சூப்பர் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து புயலாக உருவாகியுள்ளது. முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்ட இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் காரணமாகத் தமிழகத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் புயல் குறித்து இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, 'உம்பன்' புயலாக மாறி, வங்கக்கடலின் வடக்கு, மேற்காக 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறக்கூடும். இதன் காரணமாகப் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்யும். இதனால் வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள், மின்கோபுரங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் போன்றவற்றுக்குப் பெருத்த சேதம் ஏற்படலாம்.
வடகிழக்காக மேலும் நகர்ந்து செல்லும் இந்தப் புயல் மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே வரும் 20 ஆம் தேதி பிற்பகல் அல்லது மாலையில் கரையைக் கடக்கும். அப்போது மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், அதிகபட்சமாக 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.