வருகிற மார்ச் 12ஆம் தேதி இஸ்லாமியர்கள் பண்டிகையான ரம்ஜான் நோன்பு காலம் தொடங்குவதால், ஒவ்வொரு பகுதியிலும் ‘உணவுத் திருவிழா’வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர், பிரேசர் டவுனில் உள்ள எம்.எம்.ரோடு, மசூதி ரோடு மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ‘ரம்ஜான் உணவுத் திருவிழா’ என்பது வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவின் போது, ரம்ஜான் காலத்தில் இஸ்லாமியர்கள் அருந்தும் வெவ்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்யப்படும். இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், இந்த உணவுத் திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரேசர் டவுன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, இந்த சங்கத்தின் சார்பில் 3,500 பேர் கையெழுத்திட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.சி.சீனிவாடாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ‘ரம்ஜான் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள். இதன் காரணமாக பிரேசர் டவுன் பகுதியில் 40 நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த ஆண்டே, இந்த உணவுத் திருவிழாவை நிறுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கினோம். ஆனால், அதனையும் மீறி உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு, இந்த திருவிழாவின் போது ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்க, ஆம்புலன்ஸ் வர முடியாத நிலைக்கு கூட்ட நெரிசல் இருந்தது. மேலும், இந்த திருவிழாவினால், குப்பை, புகை, கழிவுநீர் போன்ற சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. இங்கு விற்பனை செய்யும் இறைச்சி உணவு வகைகள் தூய்மையற்ற முறையில் சமைக்கப்படுவதால், இதனை உண்ணும் மக்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். எனவே, ரம்ஜான் உணவுத் திருவிழாவை பிரேசர் டவுன் பகுதியில் நடத்தக்கூடாது’ என்று தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய பண்டிகையான ‘ரம்ஜான் உணவுத் திருவிழாவுக்கு’ அங்கு உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.