ஆசிரியைகள் சுரிதார் அணிய அனுமதி இல்லை!
பள்ளிகளில் ஆசிரியைகள் சுரிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. கொள்கை முடிவு என்பதால் இதில் மாற்றம் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியைகள் சேலை மட்டுமே அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதை சுரிதாரும் அணியலாம் என்று மாற்றவேண்டும். ஏனெனில் சுரிதார் உடல் முழுவதும் மூடும்படியும், வசதியாகவும் இருக்கிறது என்று முசிரி தாலுகாவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் அரசுக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார்.
அதேசமயம் இதுவரை பெண் ஆசிரியர்களிடம் இருந்து குறிப்பாக ஏதும் கோரிக்கைகள் வரவில்லை. மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியைகள் சுரிதார் அணிய தடை ஏதும் இல்லை. ஆனாலும் பெரும்பகுதியான ஆசிரியைகள் சேலை அணிவதையே தேர்வு செய்கிறார்கள் என்றும் பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.