ஹத்ராஸில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 80 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் அறிவித்தது.
மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று ஹத்ராஸ் வந்த சி.ஆர்.பி.எஃப் கமாண்டர் மன்மோகன் சிங் தலைமையிலான 80 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.