பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.
அதற்காக இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானை கைது செய்யப்பட்டு, 2 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்தும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில் இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்து உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநில ராணுவ வீரர் ராம் வகீல் என்பவரின் சகோதரி ராம் ரக்ஷா என்பவர் பி.டி.ஐ நிறுவனத்திற்கு அளித்த பெட்டியில், “புல்வாமா தாக்குதல் நடந்தபோது அங்கு உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் உடல் பகுதிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் பால்கோட் தாக்குதலில் அதுபோன்று நம்மால் எந்த உடலையும் அந்த பகுதியில் காண முடியவில்லையே. மேலும் புல்வாமா தாக்குதலுக்கு ஏறக்குறைய தாக்குதல் நடந்தவுடனேயே அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது. பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எங்கு குண்டு போட்டனர் என்பதற்கு தெளிவான ஆதாரம் இருக்க வேண்டுமல்லவா? பாகிஸ்தான் கூறுகிறது ஒரு சேதமும் இல்லை என்று ஆகவே ஆதாரம் இல்லாமல் எப்படி நம்புவது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே உ.பி.மாநிலத்தை சேர்ந்த பிரதீப் குமார் என்ற ராணுவ வீரரின் தாயார், ‘அப்பகுதியில் ஒருவரும் பலியானதாகத் தெரியவில்லை. பால்கோட்டில் சடலங்கள் எதுவும் காணப்படவில்லை. உண்மையில் சொல்லப்போனால் இதுவரை உறுதியான எந்த செய்திகளும் வரவில்லை' என கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “130 கோடி இந்திய மக்கள்தான் என் ஆதாரம்” என்று பதிலளித்துள்ளார்.