ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிபி ஜோஷி ஹிந்து மதத்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று வியழக்கிழக்மை(நேற்று) சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலாக பரவியதுடன், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சர்ச்சையையும், விமர்சனத்தையும் கொண்டு சேர்த்துள்ளது.
ராஜஸ்தானில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய சி.பி. ஜோஷி, ”காங்கிரஸ்காரர்கள் ஹிந்துவாக இருக்க முடியாது என்று பாஜகவினர் சொல்கின்றனர். அப்படி சொல்வதற்கு அவர்கள் என்ன பிராமணர்களா? ” என்றார்.
மேலும் அவர் பேசியதில், பிரதமர் மோடி, உமா பார்தி உள்ளிட்டோர் சார்ந்த ஜாதிகளின் பெயரை குறிப்பிட்டு இவர்களுக்கு ஹிந்து மதம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றார். ஹிந்து மதத்தை பற்றி பேச பிராமணர்களுக்குதான் உரிமையுள்ளது என்ற வகையில் பேசினார். இதன் பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இது பலத்தரப்பு மக்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “காங்கிரஸின் கொள்கைக்கு நேர் எதிராக சி.பி. ஜோஷியின் கருத்துள்ளது. சமூகத்தில் எந்த வகுப்பை சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்தாதப்படி கட்சியின் தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஜோஷிஜியின் கருத்து தவறானதுதான், அது காங்கிரஸ் கொள்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. இந்த கருத்திற்கு ஜோஷிஜி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து டிவிட்டரில் வருத்தம் தெரிவித்த ஜோஷி, ‘எனது கருத்து எந்த சமூக மக்களவையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.