வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து வருகிறது. கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடக்கிறது.
அப்போது மாநிலத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் வீசும் போது சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பின் மீண்டும் வடகிழக்கே நகர்ந்து வலுவிழக்கும் என்றும் அதன் பின்னர் மேற்கு வங்க கடலில் சென்று தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடப்பதால் 10,000 கிராமங்களிலும் 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 10 லட்சம் பேர் முன்னெச்சரிக்கைக்காக பாதுகாப்பான பகுதிகளுக்கும், புயல் நிவாரண முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.