மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவிந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனையடுத்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
அதே சமயம் உத்தவ் தாக்கரேவின் உறவினரான ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இதனிடையே அண்மை காலமாக உத்தவ் தாக்கரேவுக்கும், ராஜ்தாக்கரேவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ராஜ்தாக்கரேவின் வாகனம் பீட் நகரில் சென்றுக்கொண்டிருந்த போது உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த சிலர் வெற்றிலை பாக்கை வீசியதாக கூறப்படுகிற்து.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உத்தவ் தாக்கரே தானேவில் உள்ள கட்காரி ரங்காயத்தன் என்ற இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கான்வாய் மீது, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மாட்டுச் சாணம் வீசியும், தேங்காயை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். அத்தோடு சிலர் தேங்காய், வளையல்கள் உள்ளிட்ட சில பொருட்களையும் வீசியதாகவும் கூறப்படுகிறது. குடும்ப உறவுகளுக்கிடையே இருவரும் மோதிக்கொள்ளும் சம்பவம் இருக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.