சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவல்லா, நேற்று (06.08.2021) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசினார். இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதார் பூனாவல்லா, மத்திய அரசின் ஒத்துழைப்பிற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "அரசு எங்களுக்கு உதவுகிறது. நாங்கள் எந்த நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை. அனைத்து விதமான ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசி அக்டோபரில் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்ததோடு, இந்தக் கோவோவாக்ஸ் தடுப்பூசி இரண்டு டோஸ்களைக் கொண்டது எனவும், அதன் விலை பயன்பாட்டிற்கு வரும்போது தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி, அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். அமெரிக்காவில் நோவாவாக்ஸ் என்ற மருந்து நிறுவனம் தயாரித்துவரும் தடுப்பூசியை, சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவோவாக்ஸ் என்ற பெயரில் தயாரித்துவருவது குறிப்பிடத்தக்கது.