உலகையே ஆட்டிப்படைத்து வருகின்ற கரோனா, பல்வேறு வகையாக மரபணு மாற்றமடைந்துள்ளது. இவற்றுள் டெல்டா வகை கரோனா அதிகமாகப் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த டெல்டா வகை கரோனாவே இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை ஏற்படக் காரணமாக இருந்தது.
இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புகள் குறைந்து வரும் போதிலும் இங்கிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில டெல்டா வகை கரோனா தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், "கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களின் இரத்த சீரத்தை வைத்து மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், கோவாக்சின் தடுப்பூசி, ஆல்பா மற்றும் டெல்டா வகை கரோனாக்களை மட்டுப்படுத்தும் ஆன்டிபாடிக்களை உற்பத்தி செய்கிறது என்பது தெரியவந்துள்ளது" எனக் கூறியுள்ளது.
அண்மையில் ஒகுஜென் நிறுவனம் அமெரிக்காவில் தயாரித்து வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி மறுத்திருந்த நிலையில், அந்தநாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.