கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசின் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும், முன்னாள் இந்நாள் முதல்வர்களும் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணைக்கு அனுமதி கோரிவருகின்றனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணைக்கு அனுமதி தரக் கூடாது என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி சென்ற தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியது.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர், மேகதாது அணைகட்ட காவிரி கரையோர மாநிலங்களின் அனுமதி தேவை என கூறியிருந்தார். இந்தநிலையில் இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வியெழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "ஆந்திர மாநில திட்டங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அவ்வாறான எந்த அனுமதியும் தேவையில்லை. ஜல் சக்தித்துறை அமைச்சர் அவ்வாறு கூறியதும், அவரது கவனத்திற்கு இந்த தீர்ப்பை கொண்டு சென்றேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் "நாங்கள் டெல்லி சென்று மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சரை வலியுறுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.