Skip to main content

அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பொதுநல மனு; அபராதம் விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
The court dismissed the penalty for PIL against Arvind Kejriwal

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தனக்கு ஜாமீன் வழங்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஊடகங்களில் கெஜ்ரிவாலின் ராஜினாமா மற்றும் டெல்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும்.மேலும், டெல்லி திகார் சிறையில் இருந்தபடி காணொளி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி டெல்லியை ஆட்சி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும். கெஜ்ரிவாலை பதவி விலகுமாறு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் அல்லது அறிக்கைகள் மூலம் அழுத்தம் கொடுக்க தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இது தொடர்பான மனு மீதான விசாரணை, டெல்லி உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரிதம் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (08-05-24) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கருத்துக்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இதற்காக நாம் அவசரநிலை அல்லது இராணுவச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமா?. எனவே இந்த மனு பொதுநல மனு ஆகாது’ என்று கூறி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
 

சார்ந்த செய்திகள்