அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் புகார் அளித்துள்ளது ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 'டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அனுமதியின்றி நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அத்துமீறி பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து ராஞ்சி போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மறுபடியும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் தமிழகத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய மருத்துவர் சுரேஷ் பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் அமலாக்கத்துறை மீது எழுந்த புகார் மற்றும் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஈ.டி மீது புகார் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.