மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (03/10/2021) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. இந்த தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பா.ஜ.க.வின் பிரியங்கா டிப்ரேவால் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த செப்டம்பர் 30- ஆம் தேதி அன்று பவானிபூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 57% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 21 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. அதேபோல், மேற்குவங்கம் மாநிலத்தில் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளார்.
மேற்குவங்கத்தில் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.