![coronavirus cases reduced in puducherry cm announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/lMMWVFqQ0jydsnVBBo3D8OTtZXHCLx11LezZ7sGsYtg/1604834674/sites/default/files/inline-images/NARAYANASAMY.jpg)
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதாக, அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று குறைந்து வருகிறது. குணமடைந்து செல்வோர் 94 சதவீதமாக உள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகளவு கூட்டப்படுகிறது. இது ஆபத்தானது. வெளிநாடுகளில் தற்போது இரண்டாவது முறையாக கரோனா தாக்கம் அதிகரித்து வருகின்றது. மக்கள் தீபாவளி காலங்களில் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருக்க வேண்டும்.
தனியார் பேருந்துக்குள், வாடகை வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரி விலக்கு அளித்தால்தான் அவர்கள் வாகனத்தை ஓட்ட முடியும். அதற்கு துணை நிலை ஆளுநர் ஓப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் போரட்டம் நடத்துகின்றனர். துணைநிலை ஆளுநர் தன்னை திருத்திக்கொண்டு மக்களுக்காக அரசு செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.
10- ஆம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பயிற்சி அளிக்க முடியவில்லை. புதுச்சேரியில் ஆயிரம் மாணவர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. புதுச்சேரி தனி தேர்வர்களுக்கு துணை தேர்வு வைக்க தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்" என்று கூறியுள்ளார்.