கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536லிருந்து 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 519 பேருக்கும், வெளிநாட்டினர் 43 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 11 பேர் ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
கரோனா தாக்கம் தீவிரமாக இருப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். உலகமே இன்று மருத்துவர்களின் கைகளை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில் ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.