உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இதுவரை நான்கு கட்ட ஊரடங்கு முடிவடைந்து 5 ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கில் கொடுக்கப்பட்ட தளர்வின் அடிப்படையில் இந்தியா முழுவதும் சில இடங்களைத் தவிர்த்து கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிப்பது என்று ஆந்திர அரசு சில தினங்களுக்கு முன்பு முடிவெடுத்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து அனைத்து பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பதியில் செயல்பட்டு வரும் கோயிந்தராஜ சாமி கோயிலில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட கோயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் கோயில் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.