இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த நாடுதழுவிய 3- ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மேலும் மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள், மெட்ரோ ரயில் சேவை என எதுவும் இயங்காது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள், பார்கள் திறக்கப்படாது. சமூக, அரசியல், விளையாட்டு மற்றும் மதக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும். வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து, தனிப்போக்குவரத்து இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இது குறித்து அந்த குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களும் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவகங்கள் ஆன்லைன் டெலிவரி சேவைகளைத் தொடரலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை பகுதிகளில் இருக்கும் யாரும் வெளியே பயணிக்கக் கூடாது. அத்தியாவசியத் தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.