கரோனா நோய்த் தொற்றின் முதலாவது அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. புதுச்சேரியிலும் முதலாவது அலையில் முதியோர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு மே மாதத்தில் பரவிய இரண்டாவது அலையில் முதியோர்கள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளினால் தொற்று படிப்படியாக குறைந்து, தற்போது தினசரி தொற்று 100லிருந்து 150 என்கிற அளவில் இருந்துவருகிறது. அதேசமயம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளியில் சென்றுவருவதால் தற்போது குழந்தைகளுக்கும் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று (15.07.2021) 1 முதல் 5 வயது வரையிலான 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதியானது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவியதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற ஐயம் பொதுமக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் இதுவரை 21 குழந்தைகளுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 16 குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பிறந்த குழந்தைகளின் தாய்க்கு கரோனா தொற்று உள்ளதால் இந்தக் குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று இருப்பதைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம்.
பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோய் தொற்று வராது. மேலும், குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் என்பதை ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள், வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன" என்றார்.