மும்பையின் தாராவி பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் வீடுவீடாகச் சென்று சோதனை செய்து வருகின்றனர் அதிகாரிகள்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மும்பையின் தாராவி பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் சூழலில், அப்பகுதியில் மருத்துவக் குழுவினர் வீடுவீடாகச் சென்று சோதனை செய்து வருகின்றனர்.
கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ஒன்றான தாராவியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தாராவியில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கடந்த இருவாரங்களில் ஒன்பது பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில், நேற்று ஒருநாளில் 15 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவிலான மக்கள் வாழும் இப்பகுதியில் கரோனா பரவல் அதிகரித்தால் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால், அதிகாரிகள் கரோனா சோதனைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதியில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.