Skip to main content

திரிணாமூல் காங்கிரஸுக்கு திரும்பிய பாஜக எம்.எல்.ஏ!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

bjp mla joins tmc

 

மேற்குவங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இருப்பினும் சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

 

இதனையடுத்து சில பாஜக தலைவர்கள் திரிணாமூல் கட்சியில் இணைந்தனர். அதேபோல் திரிணாமூல் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்ற பலரும் மீண்டும் திரிணாமூல் கட்சிக்கு திரும்ப முயற்சித்தனர். அதேபோல் பாஜக எம்.எல்.ஏ-க்கள் பலரும் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்த சூழலில் திரிணாமூல் காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்தவரும், பின்னர் அதிலிருந்து விலகி 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, இந்தாண்டு நடைபெற்றச் சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ ஆனவருமான முகுல் ராய், கடந்த ஜூன் மாதம் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.

 

இந்தநிலையில் இந்தாண்டு நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் வென்று எம்.எல்.ஏவான தன்மோய் கோஷ், இன்று மீண்டும் திரிணாமூல் காங்கிரஸிற்கே திரும்பியுள்ளார்.

 

மீண்டும் திரிணாமூல் காங்கிரஸுக்கே திரும்பியது குறித்து தன்மோய் கோஷ் கூறுகையில், "பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. மேற்கு வங்க மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் பாஜக முயற்சித்து வருகிறது. மத்திய ஆணையங்களை பயன்படுத்தி மேற்குவங்க மக்களின் உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கின்றனர். மேற்கு வங்கத்தின் நலனுக்காக அனைவரையும் திரிணாமூல் காங்கிரஸில் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் மம்தா பானர்ஜியின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என தெரிவித்தார்.

 

தன்மோய் கோஷ் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த நிகழ்வில் முன்னிலை வகித்த மேற்குவங்க கல்வி அமைச்சர் பிராட்டியா பாசு பேசுகையில், "நாங்கள் பாஜகவுடன் அரசியல் ரீதியாக போராடுவோம். அது (பாஜக) மேற்கு வங்க மக்களை சிறுமைப்படுத்த முயல்கிறது. பல பாஜக தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸோடு தொடர்பில் உள்ளனர். நாங்கள் அனைவரையும் திரிணாமூல் காங்கிரஸில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆனால் யாரை சேர்த்துக்கொள்வது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்" என கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்