இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய கரோனாவின் இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் தினசரி பாதிப்பு 4.5 லட்சத்தையும் கடந்து சென்றது. இந்நிலையில், தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், "மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருகிறது. அதேவேளையில், குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டுகளை தயார்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் தொட்டாலும் கூட இரண்டாவது அலையைவிட பாதி அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.