மகாராஷ்டிரா மாநிலத்தில், நாலாசோபாரா ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளிடம், டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமார் மவுரியா என்பவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அந்த வகையில், புறநகர் ரயிலில் பயணித்த ஒரு தம்பதியினரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்து இந்தி மொழியில் கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது, அவர்கள் மராத்தி மொழியில் பேசியுள்ளனர். அதற்கு டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமார், ‘நீங்கள் இந்தியராக இருந்தால் இந்தி மொழியில் தான் பேச வேண்டும். நீங்கள் மராத்தி மொழியில் பேசினால் நான் வழக்குப்பதிவு செய்வேன்’ என்று மிரட்டியுள்ளார். தங்களுக்கு இந்தி தெரியாது, மராத்தி மொழியில் பேசுமாறு அந்த தம்பதியினர் கேட்டுக்கொண்டனர். இதனால், இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.
இதையடுத்து, மராத்தி மொழியில் பேச மாட்டோம் என்று ஒரு துண்டு காகிதத்தில் மன்னிப்பு கடிதம் எழுதுமாறு டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமார் வற்புறுத்தியதன் பேரில், அந்த தம்பதியினரும் அதனை எழுதியுள்ளனர். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட டிக்கெட் பரிசோதகர் அந்த வீடியோவை அழிக்க வைத்து, அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர வைத்து வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், மராத்திய அமைப்புனர் டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி அவரை பணிநீக்கம் செய்யுமாறு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு ரயில்வே, ‘எங்களுக்கு அனைத்து மதங்கள், மொழிகள், பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் சமம், அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரிக்கப்பட்டு தவறு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.