மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், புதிதாக ஆட்சியை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் நானா படோல், பா.ஜ.கவை நாயோடு ஒப்பிட்டுப் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மகா விகாஸ் அகாடியின் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் அகோலோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “பிற்படுத்தப்பட்ட சமூகத்தை பா.ஜ.க மதிக்கவில்லை. உங்களை நாய்கள் என்று சொல்லும் பா.ஜ.கவுக்கு அகோலா மாவட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வாக்களிப்பார்களா? பா.ஜ.கவை நாயாக மாற்றும் நேரம் இது. மகாராஷ்டிராவில் இருந்து பா.ஜ.கவை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொய் மூட்டையை கட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த கட்சி, தற்போது தனது இடத்தை காட்ட வேண்டிய தருணம் வந்துள்ளது. பா.ஜ.கவினர் தங்களை கடவுளாகவும் விஸ்வகுருவாகவும் கருதுகின்றனர். மகாராஷ்டிராவில், ஃபட்னாவிஸ் தன்னை கடவுளாக கருதுகிறார்” என்று கூறினார். பா.ஜ.கவை நாயோடு ஒப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவரின் பேச்சுக்கு, பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.