
கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. நேற்று இரவு மதுரையிலும் அதேபோல் குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லி செல்லும் அவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை டெல்லி செல்லும் அவர் 4 நாட்கள் டெல்லியில் இருப்பார் என்றும் 30ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கலந்துரையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழக பாஜக நேரடியாக மத்திய உள்துறை அமைச்சருக்கு நேரடியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது தொடர்பாக கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.