காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கைப்படி, கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மல்லிகார்ஜூன கார்கே ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, மிக முக்கியமான மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் அல்லது மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 16 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். நேரு குடும்பத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்துள்ளனர்.
நேரு குடும்பத்தைச் சேராதவர்கள் 11 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். நேரு குடும்பத்தைச் சாராத கடைசித் தலைவராக 1996- 1998 ஆம் ஆண்டுகளில் சீதாராம் கேசரி இருந்துள்ளார்.
போட்டி களத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், ஆகியோர் இருக்கும் நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆகும் வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது.