ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 63.88% வாக்குகள் பதிவான அந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தல் முடிவுகளில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி, பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களான 49 இடங்கள் கைபற்றி ஆட்சியமைக்க வழிவகுத்தது. அதிக இடங்களை தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி கைப்பற்றியதால், ஜம்மு காஷ்மீரின் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, நடைபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் கூட்டத்தில், செயல் தலைவரான உமர் அப்துல்லா குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 4 பேர் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, ஐந்து ஆண்டு காலமாக ஜம்மு காஷ்மீரில் நடந்த ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து மாநில ஆட்சி அமைக்க வேண்டும் என அம்மாநில துணைநிலை ஆளுநரிடம் உமர் அப்துல்லா, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் பேரில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்த நிலையில், இன்று (16-10-24) ஸ்ரீநகரில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். 6 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் பங்கேற்கப் போவதில்லை என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னாவை தோற்கடித்த சுயேட்சை எம்.எல்.ஏ சுரீந்தர் சிங் சவுத்ரி, உமர் அப்துல்லா அமைச்சரவையில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த 5 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு கொடுப்பதாக முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஹமீத் கூறுகையில், “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு கட்சி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியும் பலமுறை வாக்குறுதி அளித்தும் பலனில்லை. அதனால், நாங்கள் அதிருப்தியில் இருக்கிறோம். எனவே நாங்கள் தற்போது அமைச்சரவையில் சேரவில்லை. மாநில அந்தஸ்துக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். ஒரு மாதத்திற்கு முன்பு வரை எதிர்பார்க்காத அளவுக்கு தேர்தலில் கட்சியின் செயல்திறன் குறைவாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது பொருத்தமாக இருக்காது. எங்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது, அமைச்சரவையில் அங்கம் வகிப்பது சரியாகத் தெரியவில்லை. எங்களிடம் ஆறு எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் கடந்த காலத்தில் கேபினட் அமைச்சர்களாக இருந்துள்ளனர். எனவே ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது. அரசாங்கத்திற்கு வெளியே இருக்க கட்சி முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம்” என்று கூறினார்.