போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞரை போலீசார் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவரை திருட்டு வழக்கில் போலீசார் கடந்த 19ஆம் தேதி கைது செய்தனர். மேலும், ஆகாஷ் பிடியில் இருந்த இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் காவலில் இருந்த ஆகாஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், அவரை கடந்த 21ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷை போலீசார் சித்ரவதை செய்ததால்தான் அவர் உயிரிழந்தார் என்று ஆகாஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையில், ஆகாஷின் உடலை போலீசார் கைப்பற்றி அவரது வீட்டிற்கு கொண்டு சென்றபோது, ஆகாஷின் உறவினர்கள் போலீசாரைத் தாக்கி அவர்களுடைய வாகனத்திற்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ஆகாஷின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கையும், பிற விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினர். போலீஸ் காவலில் இருந்த பட்டியலின இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.