நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்று இரவு உயிரிழந்தார்.
மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் செய்தார்.
இதனையடுத்து கோவா பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் அம்மாநில முதலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 14 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திரகாந்த் கவேல்கர் கூறுகையில், "கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம். 14 எம்.எல்.ஏக்களுடன் நாங்கள்தான் தனிப்பெரும் கட்சியாக உள்ளோம். எனவே, எங்களைதான் முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளோம் எனவும் அவரிடம் கூறியுள்ளோம்” என்றார்.