தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒகினவா, ஓலா நிறுவனங்களின் எலக்ட்ரிக் பைக்குகள் சாலையிலேயே தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் எலக்ட்ரிக் பைக் வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஒகினவா பேட்டரியில் கோளாறு உள்ளதாக 3,215 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. வாகனங்கள் திடீரென சாலையில் தீப்பற்றிய சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் 2000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பியூர் இ.வி நிறுவனத்தினால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட இ-ஸ்கூட்டர்களில் நேர்ந்த தீ விபத்துக்களை அடுத்து இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளது. குறிப்பாக இ- டிரன்ஸ் பிளஸ் மற்றும் இ-ப்ளுட்டோ 7 ஜி இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தீ பற்றியதில் 80 வயதான முதியவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.