2024 மக்களைவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதே தயாராகத் துவங்கிவிட்டன. அந்தவகையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சில வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தியைச் சந்தித்தார். இந்த சந்திப்பையடுத்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப் பின் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என்றும், காங்கிரஸில் தனக்கு தேசிய அளவிலான பொறுப்பைக் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் ஜி -23 தலைவர்களில் சிலர், பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பொறுப்பை வழங்கும் திட்டம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல் வீட்டில் கொண்டாடப்பட்ட கோகுலாஷ்டமி விழாவில் சந்தித்துக்கொண்ட ஜி-23 தலைவர்கள், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது குறித்து விவாதித்ததாகவும், அப்போது பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸில் முக்கிய பொறுப்பினை வழங்க சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சிலர் ஆதரவு தெரிவித்ததாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து காத்திருந்து பார்க்கலாம் என ஜி-23 தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஜி-23 தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.