![Congress fulfilled the next scheme to benefit 1.28 crore women](http://image.nakkheeran.in/cdn/farfuture/PmskuAhqmoQnOp1fiP3-_KhwpevQ3SDFgdRh5cAV0Sk/1693398929/sites/default/files/inline-images/raaa-ni.jpg)
காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்தில் இன்று ( 30-08-23) , 'க்ருஹ லட்சுமி' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் ஐந்து முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தது. அதில், "அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் , ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண் தலைவிக்கு ரூ 2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ 3,000 மற்றும் வேலையற்ற டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,500 ஊக்கத்தொகை மற்றும் பொது போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்திருந்தது.
இதில், ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண் தலைவிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ராகுல் காந்தி, "இன்று கோடிக்கணக்கான பெண்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.2000 பெறவுள்ளனர். தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சி கர்நாடகா மாநில மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்திருந்தது. காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் ஒன்றை அறிவித்தால், அதனை நிறைவேற்றுவார்கள். இன்று, டேப்லெட்டைக் கிளிக் செய்தால், கோடிக்கணக்கான பெண்கள் நேரடியாக தங்களுக்கான வங்கி கணக்குகளில் ரூ. 2000 பெறுவார்கள்.
கர்நாடகாவில் தேர்தலுக்குப் பிறகு பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். 'சக்தி' திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நாங்கள் நிறைவேற்றினோம். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அறிவித்த திட்டத்தில், ஐந்தில் நான்கு திட்டங்கள் பெண்களுக்காக உருவாக்கப்பட்டவை. இதற்குப் பின்னால் ஒரு ஆழமான சிந்தனை இருக்கிறது. மத்திய அரசு கோடீஸ்வரர்களுக்காக வேலை செய்கிறது. ஆனால், ஒரு அரசு ஏழை மற்றும் எளியோருக்காக செயல்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று பேசினார்.
இதையடுத்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “இது உலகில் மிகப்பெரிய பெண்கள் நலத்திட்டமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள 1.28 கோடி பெண் குடும்பத் தலைவிகள் இந்த நிதியுதவியை இன்று முதல் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.